தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடிவடைந்த நிலையில், சில பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வெப்ப சலனம் காரணமாக பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.