மேட்டூர் அணையில் சேலம் ஆட்சியர் நேரில் ஆய்வு
மேட்டூர் அணையை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;
சேலம்,
கடந்த 5-ஆம் தேதி சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியில் இருந்து 50 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆகையால், இன்று டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து 32,500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மேட்டூர் அணையை நேரில் பார்வையிட்டு செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
அணையிலிருந்து 32,500 கன அடி நீர் திறக்கப்படுவதால் அணைப்பகுதியில் யாரும் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.
மேட்டூர் அணையின் அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும். இதுவரை 42 முறை மட்டுமே 120-வது அடியை எட்டியுள்ளது. தற்போது 3 அல்லது 4 மணி நேரத்திற்குள் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி 43-ஆவது முறை நிரம்ப உள்ளது.
மேலும், மேற்கு மற்றும் கிழக்கு கால்வாயில் 700 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூடுதல் தகவல் தெரிவித்தார்.