தமிழகத்தில் எந்த இடத்திலும் ரேஷன் பொருட்கள் பெறும் திட்டம்: விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று - அமைச்சர் காமராஜ் தகவல்

தமிழகத்தில் எந்த இடத்திலும் ரேஷன் பொருட்கள் பெறும் திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2019-09-05 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூரில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பது ஒரு மாநிலத்தில் இருந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பழக்கத்தில் உள்ள உணவு பொருட்களான அரிசி, கோதுமையை வழங்கிட வேண்டும் என்பது தான். அதுவும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் உள்ளதை மத்திய அரசு சொல்கிறது. அதற்கான உணவினை மத்திய அரசு ஒதுக்கீடு மூலம் வழங்கப்படும் என்பது திட்டத்தின் நோக்கம்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் முதலில் கையெழுத்திட்டது தி.மு.க. ஆட்சி தான். காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்தால் நல்ல திட்டம். பா.ஜனதா கூட்டணி கொண்டு வந்தால் தவறான திட்டம் என ஸ்டாலின் கூறுகிறார். மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் பொது வினியோக திட்டத்தில் இலவச அரிசி, சிறப்பு பொது வினியோக திட்டம், உணவு பாதுகாப்பு திட்டத்தோடு இணைந்து சிறப்பாக செய்து வருவது தமிழக அரசு மட்டும்தான்.

பொதுவினியோக திட்டம் எந்தவித குறைபாடுமின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் பொது வினியோக திட்டத்தில் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

ஆகையால் தமிழகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெறலாம் என்கிற திட்டத்தை விரைவிலேயே தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பார். ஒரே நாடு, ஒரே ரேஷன் என்ற கொள்கையால் தமிழக பொது வினியோக திட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்