ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் நடைமுறை கொண்டுவரப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-05 16:58 GMT
தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக அமைச்சர்  கடம்பூர் ராஜூ கூறியிருந்தார்.  இதுதொடர்பாக ஏற்கனவே 3 தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து பேசி உள்ளதாகவும், அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்து உள்ளதாகவும், படிப்படியாக இந்த முறை அமல்படுத்தப்படும் எனவும் அமைச்சர்  கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

மேலும்,  ஆன்லைன் முறை முதலில் மாநகராட்சி மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் நடைமுறைப்படுத்தப்படும். பின்னர் ஏ.சி. தியேட்டர்களில் அமல்படுத்தப்படும். தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 1000 தியேட்டர்களிலும் ஆன்லைன் மூலமாகத்தான் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற முறை விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர்  கடம்பூர் ராஜூ ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் நடைமுறை கொண்டுவரப்படும் என்றும் தியேட்டர்களில் வரும் முழு வசூல் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு என்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்