சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல் நியமனம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி தலைமை நீதிபதியாக அவரை நியமித்து மத்திய அரசு விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.;

Update: 2019-09-05 00:06 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் வி.கே.தஹில்ரமானி. இவர் மும்பை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றியவர். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி பதவி ஏற்றார்.

இந்த நிலையில், இவரை மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு உத்தரவிட்டது. அதேநேரம், மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் ஏ.கே.மிட்டலை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து மூத்த நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் கொண்ட குழு, கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி கூடி, இந்த முடிவை எடுத்தது. அதில் சிறந்த நிர்வாகம் நடைபெறவேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் காரணம் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி, சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவுக்கு, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். இந்த மனுவை பரிசீலித்த மூத்த நீதிபதிகள் குழு, இடமாற்றம் தொடர்பாக எடுத்த முடிவை மாற்ற முடியாது என்றும், தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானியின் கோரிக்கையை நிராகரிப்பதாக நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனால், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலையும், மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமானியையும் நியமித்து விரைவில் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள ஏ.கே.மிட்டல், கடந்த 1958-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி சத்தீஷ்காரில் பிறந்தார். இளங்கலை வணிகவியல் படிப்பையும், சட்டப்படிப்பையும் டெல்லியில் முடித்தார். பஞ்சாப் -அரியானா ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்தார். உரிமையியல், மத்திய, மாநில அரசு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள இவர், கடந்த 2004-ம் ஆண்டு பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவர் 2018-ம் ஆண்டு மே மாதம் பஞ்சாப் -அரியானா ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பின்னர், கடந்த மே மாதம் மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற உள்ள நிலையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்