நீலகிரி அவலாஞ்சியில் ஒரே நாளில் 82 செ.மீ. கொட்டி தீர்த்த மழை அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் ஒரே நாளில் 82 செ.மீ. மழை கொட்டி தீர்த்து உள்ளது.;

Update: 2019-08-08 23:30 GMT
சென்னை, 

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 2 நாட்களாக பேய் மழை கொட்டுகிறது. அங்கு கடந்த 6-ந் தேதி ஒரே நாளில் 42 செ.மீ. மழை பதிவானது.

இந்தநிலையில் அவலாஞ்சி பகுதியில் நேற்றும் இடைவிடாமல் கனமழை பெய்தது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 82 செ.மீ. மழை கொட்டியுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 82 செ.மீ. மழை பதிவாகி இருப்பது இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன்னதாக கடலூரில் ஒரே நாளில் 57 செ.மீ. மழை பெய்தது தான் அதிகபட்சமாக இருந்து வந்தது.

வானிலை ஆய்வு மையத்துக்கே சந்தேகம்

அவலாஞ்சிக்கு அடுத்தபடியாக மேல் பவானியில் 30 செ.மீ, ஜி பஜாரில் தலா 24 செ.மீ., தேவாலாவில் 21 செ.மீ., வால்பாறை 20 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

அவலாஞ்சியில் கனமழை கொட்டியதற்கான காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறுகையில், ‘அவலாஞ்சியில் 82 செ.மீ. மழை தான் பெய்து இருக்கிறது என்பது எங்களுக்கே சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. ஆனால் அங்கிருந்து வரும் தகவல்கள் அது உண்மை தான் என்று உறுதிப்படுத்துகின்றன.

டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கும் இதுகுறித்து தெரிவித்து உள்ளோம். இதை சோதித்து பார்ப்பதற்காக இங்கிருந்து அதிகாரிகள் நீலகிரிக்கு செல்ல இருக்கிறார்கள். காற்றின் வேகம் அங்கு அதிகமாக இருந்ததன் காரணமாக, மேற்கு நோக்கி இருந்த அவலாஞ்சி மலைப்பகுதியில் அந்த காற்று பட்டதால், அந்த இடத்தில் மட்டும் மழை அதிகம் பெய்து இருக்கிறது’ என்றார்.

2 நாட்களுக்கு கனமழை

நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் வழக்கத்தை விட அதிகமாக மழைப்பொழிவு பதிவாகி இருக்கிறது. இந்தநிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) நீலகிரி, கோவை உள்பட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு (இன்றும், நாளையும்) மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும். 2 நாட்களுக்கு பிறகு காற்றின் வேகம் குறைந்து மழையும் குறையும்.

தென்மேற்கு பருவக்காற்று தொடர்ந்து வலுவான நிலையில் இருப்பதால் உள் மற்றும் தென் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மத்திய மேற்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

அதுமட்டுமில்லாமல், அந்தமான் கடல் பகுதிகளுக்கும் அடுத்த 3 நாட்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை வரை) மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை தமிழகத்தில் 14.9 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 10.9 செ.மீ. மழை தான் பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 27 சதவீதம் குறைவு ஆகும்.

மேலும் செய்திகள்