அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள குளம் சுத்தமாக இருக்கிறதா? அறிக்கை தாக்கல் செய்ய அரசு வக்கீலுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளம் தூர்வாரப்பட்டு சுத்தமாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு வக்கீலுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-08-05 23:06 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், அசோகன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்குப்பிறகு வெளியில் எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை குளத்தில் இருந்ததால் குளத்தை அதிகாரிகள் முறையாக தூர்வாரவில்லை.

அத்திவரதர் சிலை குளத்திற்கு வெளியே எடுக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் குளத்தை ஆழமாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அத்திவரதர் சிலை இன்னும் சில நாட்களில் மீண்டும் குளத்துக்குள் வைக்கப்படும். எனவே, அதற்குள் அனந்தசரஸ் குளத்தை ஆழமாக தூர்வாரி, அனைத்து கழிவுகளையும் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

ஆய்வு செய்ய வேண்டும்

இந்த மனு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘அத்திவரதர் சிலையை அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுப்பதற்கு முன்பு, அங்கிருந்த நீரை மீனுடன் சேர்த்து பொற்றாமரைக்குளத்திற்கு மாற்றிவிட்டோம். அதன்பிறகு அனந்தசரஸ் குளத்தில் இருந்த அனைத்து கழிவுகளும் அப்புறப் படுத்தப்பட்டு, முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அனந்தசரஸ் குளத்திற்கு யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, ‘அத்திரவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளம் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அரசு பிளடர் எம்.மகாராஜா, அரசு சிறப்பு வக்கீல் எம்.கார்த்திக்கேயன் ஆகியோர் நாளை (புதன்கிழமை) நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். பின்னர், அதுகுறித்த அறிக்கையை 8-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்