அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி இன்று காஞ்சீபுரம் வருகை

காஞ்சீபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வருகிறார்.;

Update: 2019-07-12 00:00 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வருகிறார். அவரது வருகையையொட்டி இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஜயகாந்த்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். நேற்று 11-வது நாளாக அத்திவரதர் காவி நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று காலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் திரைப்படம் வெற்றி பெறவேண்டி படப்படிப்பிற்கான ‘கிளாப் போர்ட்டை’ அத்திவரதரின் பாதத்தில் வைத்து பூஜை செய்தார்.

பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 3 மணி அளவில் அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சீபுரம் வருகிறார். அவரது வருகையையொட்டி, காஞ்சீபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அவரது வருகையையொட்டி இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று அத்திவரதரை பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. மாநிலத்தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, நடிகர் மயில்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்