டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்வு சட்டசபையில் அமைச்சர் பி.தங்கமணி அறிவிப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்த்தப்படுவதாகவும், ஏப்ரல் மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.தங்கமணி அறிவித்தார்.
சென்னை,
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பளம் உயர்த்தப்படுவதாகவும், ஏப்ரல் மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.தங்கமணி அறிவித்தார்.
சட்டசபையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்தும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் அமைச்சர் பி.தங்கமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ரூ.5 கோடி மானியம்
கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கவும், அதன்மூலம் ஏற்படும் தீமைகளை களையவும், கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்கள் தொடர்பான மதுவிலக்கு குற்றங்களில் சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்துபவர்களின் பொருளாதார மறுவாழ்வுக்காகவும், அவர்கள் வேறு தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும் 2011-2012-ம் ஆண்டு முதல் ரூ.5 கோடி மானியமாக மறுவாழ்வு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டிலும் முதல்-அமைச்சரின் ஆணையின்படி ரூ.5 கோடி மானியமாக மறுவாழ்வு நிதி வழங்கப்படும்.
மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மாவட்டந்தோறும் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) 26,056 சில்லரை விற்பனைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சில்லரை விற்பனை பணியாளர்களான மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் முறையே ரூ.500, ரூ.400 மற்றும் ரூ.300 என தொகுப்பு ஊதியமானது உயர்த்தி வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு இந்த ஊதிய உயர்வு முறையே ரூ.750, ரூ.600 மற்றும் ரூ.500 என உயர்த்தி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் முறையே ரூ.2 ஆயிரம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வுகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதனால், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் 7,074 மேற்பார்வையாளர்களும், 15,435 விற்பனையாளர்களும் மற்றும் 3,547 உதவி விற்பனையாளர்களும் பயன்பெறுவர். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.62.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பண வெகுமதி ரூ.15 லட்சம்
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் அவர்களுக்கு உதவும் உள்ளூர் காவலர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு பண வெகுமதிகள் வழங்குவதற்கு சென்ற ஆண்டு ரூ.10 லட்சம் என ஒதுக்கீடு செய்யப்பட்ட வெகுமதி தொகையானது, இந்த ஆண்டு ரூ.15 லட்சம் என உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்படும்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதைமீட்பு மையங்களை அரசு ஏற்கனவே ஏற்படுத்தியுள் ளது. கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர் ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைந்துள்ள போதைமீட்பு மையங்களுக்கு மருத்துவர் உள்ளிட்ட ஊழியர்கள் சம்பளம் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு ரூ.3.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.