நன்றாக பேசுகிறார் ; ‘முதல்-அமைச்சர் பேச்சை கண்டு வியந்து போய் இருக்கிறேன்’ - சட்டசபையில் துரைமுருகன் பாராட்டு

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து, கேள்வி நேரம் தொடர்பாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

Update: 2019-07-03 23:40 GMT
எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்-அமைச்சர்களாக இருந்தபோது நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, காவல் ஆகிய துறைகளில் இருந்து கேள்வி-பதில் நேரத்தில் கேள்விகள் இருக்கும். இந்த 3-ம் முக்கியமான துறைகள். கேள்வி-பதில் நேரத்தை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்று நான் கூறியபோது, சபாநாயகரே கேள்வி-பதில் நேரம் மிக முக்கியமானது என்று தெரிவித்தீர்கள்.

நான் குறிப்பிட்ட இந்த 3 துறைகளும் முதல்-அமைச்சர் வசம் உள்ளது. ஆகவே நாளை (இன்று) முதல் இந்த துறைகளின் மீது கேள்விகள் இடம் பெறுமா?. ஏனென்றால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றாக பேசுகிறார், அவரின் பேச்சை கேட்டு பல முறை நான் வியந்து இருக்கிறேன். அடேங்கப்பா...என்ன பேச்சு. அப்படி பேசும் முதல்-அமைச்சர், கேள்வி நேரத்தில் அவர் துறை சார்ந்த கேள்விகளை இடம் பெற செய்ய வேண்டும்’ என்றார்.

இவ்வாறு துரைமுருகன் பேசிக்கொண்டிருந்போது, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவையில் சிரித்தபடி அமர்ந்திருந்தார். எந்த பதிலும் வராத நிலையில், மீண்டும் துரைமுருகன் எழுந்து, என் கேள்விக்கு பதில் வரவில்லையே? என்றார். அப்போது குறுக்கீட்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘நீங்கள் என்ன கேள்விகள் கேட்டாலும், முதல்-அமைச்சர் எல்லா கேள்விகளுக்கும் விடையளிப்பார். கண்டிப்பாக கேள்வி நேரத்தில் அவரது துறை சார்ந்த கேள்விகள் இடம் பெறும்’ என்றார். 

மேலும் செய்திகள்