உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
ஆனால், இந்த அறிவிப்பில் எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்கள். இதனால், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் தள்ளிக்கொண்டே போனதால், தனி அதிகாரிகளின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இதுவரை 5 முறை அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தற்போது 6-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.