புதிய ரெயில்வே அட்டவணை: நாடு முழுவதும் 261 ரெயில்களின் வேகம் அதிகரிப்பு

இந்திய ரெயில்வேயின் புதிய அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் நாடு முழுவதும் 261 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.;

Update: 2019-07-01 23:08 GMT
சென்னை, 

இந்திய ரெயில்வே சார்பில் ஜூலை 1-ந் தேதி ரெயில்வே அட்டவணை மாற்றப்படுவது வழக்கம். இந்த அட்டவணையில் மாற்றம் செய்ய ‘மிஷன் ரப்தார்’ என்ற திட்டம் 2016-17 ரெயில்வே பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சரக்கு ரெயில்களின் வேகம் 2 மடங்காகவும், பயணிகள் ரெயில்கள் 25 கி.மீ. வேகமும் 5 ஆண்டுகளுக்குள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த ஆண்டுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டது.

இதில் பல்வேறு ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது. மேலும் சில புதிய ரெயில்களையும், ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புதிய அட்டவணையில் இந்திய ரெயில்வேயில் உள்ள 17 ரெயில்வே மண்டலங்களில் 261 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 1 மணிநேரம் 50 நிமிடங்கள் பயணநேரம் குறையும். மேலும் 49 புதிய ரெயில்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணையில் ஒரு வந்தே பாரத் மற்றும் உதே எக்ஸ்பிரசும், 34 ஹம்சபார் எக்ஸ்பிரசும், 11 அந்யோதயா எக்ஸ்பிரசும், 2 தேஜஸ் எக்ஸ்பிரசும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அட்டவணையில் தெற்கு ரெயில்வேயிலும் பல்வேறு ரெயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் ரெயில்களின் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை எழும்பூர்-குருவாயூர்(16127) தினசரி காலை 8.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.25 மணிக்கும், எழும்பூர்-கொல்லம்(16723) தினசரி இரவு 7.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.10 மணிக்கும், எழும்பூர்-நெல்லை(12631) தினசரி இரவு 8.10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 7.50 மணிக்கும், எழும்பூர்-தஞ்சாவூர்(16865) தினசரி இரவு 10.40 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.55 மணிக்கும், எழும்பூர்-சேலம்(22153) தினசரி இரவு 11 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.45 மணிக்கும் புறப்படும் என மாற்றப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் (11074) செவ்வாய்கிழமைகளில் மதியம் 3.15 மணிக்கு பதிலாக 3.50 மணிக்கும், சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம்(12697) ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 3.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 3.10 மணிக்கும், சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம்(12695) தினசரி மதியம் 3.25 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 3.20 மணிக்கும் புறப்படும்.

சென்னை சென்டிரல்-ஆமதாபாத்(19419) வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.30 மணிக்கும், சென்னை சென்டிரல்-ஆமதாபாத்(22919) புதன்கிழமைகளில் இரவு 8.10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.30 மணிக்கும், சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு(வண்டி எண்:12639) தினசரி காலை 7.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 7.40 மணிக்கும், சென்னை சென்டிரல்- கே.எஸ்.ஆர்.பெங்களூரு(12607) தினசரி மதியம் 3.45 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 3.30 மணிக்கும், சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு(வண்டி எண்:1 2639) தினசரி காலை 7.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 7.40 மணிக்கும், சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு(12657) தினசரி இரவு 11.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.55 மணிக்கு புறப்படும்.

பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த நீண்ட தூரம் செல்லும் 411 இணை ரெயில்கள், எல்.எச்.பி. பெட்டிகள் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்