தமிழகத்துக்கு ரெயில் மூலம் தண்ணீர் தர முன்வந்த கேரளா

குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கேரளா அரசு தண்ணீர் கொடுக்க முன்வந்தது. அதற்கு, ‘நாங்களே நிலைமையை சமாளித்து கொள்வோம்’, என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

Update: 2019-06-20 23:00 GMT
சென்னை, 

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் சுற்றி திரியும் அவலமும் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தண்ணீருக்காக மக்கள் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் சிறிய கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை மூடப்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகவேகமாக பரவி வருகின்றன. தண்ணீர் இல்லாத தமிழகத்தின் அவலநிலை படங்கள் மற்றும் வீடியோ காட்சி வழியாகவும் வைரலாக பரவி வருகின்றன.

இந்தநிலையில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கேரள அரசு முன்வந்தது.

சமாளித்து விடுவோம்

இதுசம்பந்தமாக கேரளா அரசு சார்பில் அங்குள்ள அதிகாரிகள், தமிழக முதல்-அமைச்சர் அலுவலக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினர். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை குறைக்க கேரளா அரசு தண்ணீர் தந்து உதவ முன்வந்துள்ளதாக கூறினர்.

ஆனால் இதுசம்பந்தமாக தமிழக அரசு ஆலோசித்தது. கேரளாவிடம் தண்ணீர் பெறும் அளவுக்கு தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவவில்லை என்றும் இங்குள்ள நிலைமையை தமிழக அரசே சமாளித்துக் கொள்ளும் என்றும் முதல்-அமைச்சர் அலுவலக அதிகாரிகள் கேரள அரசிடம் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

20 லட்சம் லிட்டர்

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக முக்கிய நீர்த்தேக்கங்கள் உள்பட நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. விவசாய தொழிலும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றது. எனவே கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு கேரளாவில் இருந்து தண்ணீர் வழங்க கேரளா அரசு முடிவு செய்தது.

அந்தவகையில் திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகத்துக்கு முதற்கட்டமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரெயில் மார்க்கமாக தமிழகத்துக்கு அனுப்பலாம் என்று கேரளா அரசு தீர்மானித்து இருந்தது. அதுகுறித்து தமிழக முதல்-அமைச்சரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் கூறப்பட்டது.

ஆனால் ‘தற்போது தண்ணீர் தர தேவையில்லை, நிலைமையை சமாளித்து கொள்வோம்’ என்று அந்த அலுவலகத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரெயில் தண்ணீர் அறிவிப்பு

இந்தநிலையில் தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, போதுமான அளவு தண்ணீர் உள்ள அண்டை மாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொடுப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து இன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்