டிக்டாக் செயலியால் விபரீதம்: இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் கைது

டிக்டாக் செயலியால் இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் கைது செய்தனர்.;

Update: 2019-05-31 23:28 GMT
கோவை,

கோவையை அடுத்த அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (28). இவர் கோவை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக கனகராஜ் மற்றும் நந்தினி ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக நந்தினி செல்போனில் டிக்டாக் செயலியை பயன்படுத்தி அதிகளவில் வீடியோக்களை பதிவேற்றம் செயது வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கனகராஜ் செல்போனில் நந்தினியை தொடர்பு கொண்டு டிக்டாக் செயலி வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்றும், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறும் கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து பேச அவர் நந்தினியை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். அப்போது நீண்ட நேரம் அழைப்பு பிசியாக இருந்ததால் நேற்று மதியம் கனகராஜ் மது குடித்துவிட்டு, நந்தினி வேலை செய்யும் கல்லூரிக்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியின் தலை மற்றும் உடலில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கனகராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்