தூத்துக்குடி துப்பாக்கி சூடு: மு.க.ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2019-05-21 20:30 GMT
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுற்றுப்புறச் சூழலுக்கும் மக்களின் உயிர் வாழ்வுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தைச் சகித்துக்கொள்ளாமல், போராடியவர்கள் மீது அ.தி.மு.க. அரசு ஈவு இரக்கமின்றி கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டை மறக்கவே முடியாத மே 22-ந் தேதி தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். மாணவி உள்ளிட்ட 13 அப்பாவிகளின் உயிரைப் பறித்த அந்தக் கொடூர துப்பாக்கிச் சூட்டினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் ஆதரித்துப் பேசிய மனிதாபிமானமற்ற செயலையும் மறக்க முடியாத நாள். இந்தத் துப்பாக்கிச் சூடு தூத்துக்குடி மக்களை மட்டுமல்ல தமிழக மக்களை, ஏன் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை மிகுந்த அதிர்ச்சியில் உறைய வைத்த நாள் என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.

அப்பாவிகளின் 13 உயிர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வருடம் நிறைவடைவதையொட்டி துயரம் நிறைந்த அந்த குடும்பங்களுக்கும், போலீஸ் தடியடிக்கும் அ.தி.மு.க. அரசின் அடாவடி அராஜகத்திற்கும் ஆளான தூத்துக்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

விரைவில் தி.மு.க. அரசு அமைந்ததும் காட்டுமிராண்டித் தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீதும், அந்தத் துப்பாக்கி சூட்டிற்கு வன்மத்தோடு ஆணையிட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில், மனித உரிமைகளைக் காலில்போட்டு மிதித்துக் கசக்கிய அ.தி.மு.க. ஆட்சியின் கொடூரமான துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்கவும், அமைச்சரவையைக் கூட்டி ஒரு கொள்கை முடிவினை எடுத்து நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் எடுக்கப்படும் என்று இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி முறையிட சென்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது வன்முறையை ஏவியது காவல்துறை. அமைதி வழியில் நடந்த பேரணியின் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவி மக்களின் உயிரை பறித்தது எடப்பாடி பழனிசாமி அரசு.

துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, துப்பாக்கிச் சூட்டில் உயிர் பலியானவர்களின் குடும்பங்களைக் காவல்துறை தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தி வருகின்றது.

கடந்த ஆண்டு மே 22-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்குக் கூட காவல்துறை அனுமதி மறுக்கின்றது. நீதிமன்றத்திற்குச் சென்றால், ‘அரங்குக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்துங்கள்’ என அறிவுறுத்தப்படுகின்றது.

தூத்துக்குடி மக்களை ஏமாற்றி வரும் தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் முறியடிக்க, முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாளில் உறுதி ஏற்போம். ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்பதை, மத்திய - மாநில அரசுகளுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் ஆத்மா சாந்தியடைய சமத்துவ மக்கள் கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். துப்பாக்கிச்சூடு நடைபெற்று ஓராண்டு முடிந்த நிலையில் முறையான விசாரணை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அந்த குடும்பத்திற்கு போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுகுறித்து அரசு விரைவான முடிவு எடுக்க சமத்துவ மக்கள் கழகம் சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின் அறிக்கை

மேலும் செய்திகள்