தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் -தலைவர்கள் கருத்து
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தல் நேற்றுடன் (மே 19) முடிந்தது. மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி வேலூர் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுடன் மக்களவை தேர்தல் நடந்து முடிந்து விட்டதால், அனைத்து ஊடகங்களும் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. நாடு ழுமுவதும் பாஜக-வின் கை ஓங்கி இருப்பதையே பெரும்பாலும் ஊடகங்களின் கருத்து கணிப்பாக உள்ளது.
ஜி நியூஸ் கருத்து கணிப்புப் படி, 542 இடங்களில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 308 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதேவேளையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 117 இடங்களும், மற்றவர்கள் 117 இடங்களைப் பெறுவார்கள் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது என ஜி நியூஸ் செய்தி ஊடகம் கணிப்பு செய்துள்ளது. அதேபோல பெரும்பாலும் பாஜக-வே முன்னணி பெறும் என கருத்து கணிப்புக்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் 19 இடங்களில் திமுகவும், 6 இடங்களில் அதிமுகவும், 14 இடங்களில் இழுபறி நிலவும் என கூறப்பட்டு உள்ளது.
கருத்து கணிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, தேர்தல் முடிவு பற்றி வந்திருப்பது கருத்துக் கணிப்புகள் அல்ல கருத்துதிணிப்புகள். அ.தி.மு.,க கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெறும் என கூறினார்.
ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் குறித்து பேசிய கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:-
ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் எப்பொழுதும் சரியாக இருந்ததில்லை. தவறாகவும் இருந்திருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு பாஜக ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புக்கள் வெளியாகின. ஆனால் என்ன நடந்தது. கருத்துக்கணிப்புக்கள் பொய்யானது. அதனால் உண்மையான முடிவுக்காக மே 23-ம் தேதி வரை காத்திருப்போம் எனக் கூறினார். அதேபோல கேரளாவில் நாங்கள் தான் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனவும் கூறினார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ”நாட்டில் 80 கோடி மக்கள் தொகையில் 5 லட்சம் பேரிடம் மட்டுமே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 2004 மற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது வெளியான கருத்துக்கணிப்புகள் 90% பொய்த்துப்போனது. அதனால், தற்போது வெளியாகியிருப்பது குறித்துக் கூற முடியாது. கருத்துக்கணிப்புகள் பல்வேறு மாநிலங்களில் நம்ப முடியாத அளவிற்கு வந்துள்ளது. அதனால், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே முழுமையான முடிவுகள் தெரியவரும்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் தரிசனம் செய்த தேவகவுடா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், ''கடந்த 2004-ல், இதேபோன்று கருத்துக் கணிப்புகள் பா.ஜ., தான் மத்தியில் ஆட்சியமைக்கும் என்று கூறின. ஆனால், அந்த கணிப்புகள் பொய்யானது. அதேபோன்று தான் இப்போதும், கருத்துக் கணிப்புகளுக்கு மாறாகவே முடிவுகள் இருக்கும்,'' என்றார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. 23-ம் தேதி மக்களின் தீர்ப்பு தெரியும் என கூறினார்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
கருத்துக்கணிப்புகளை நான் நம்பவில்லை. கருத்துக்கணிப்புகள் மூலம் ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றுவதே திட்டமாக இருக்கும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக, உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது,
தமிழகத்தில் நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ், மாநிலக் கட்சிகளின் கூட்டணி அரசு அமையும் என கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்தியாவில் ஏற்படப்போகும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றனர் என கூறினார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறும்போது, மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்; வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்துவோம் என கூறி உள்ளார்.