ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: பெங்களூரு அழகுகலை நிபுணர் கைது

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த அழகுகலை நிபுணர் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-18 21:52 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் விசாரணையில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த கும்பல் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே புரோக்கர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தைகளின் பெற்றோரை கண்டறிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அழகுகலை நிபுணர் கைது

இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த புரோக்கர்கள் அருள்சாமி, ஹசீனா உள்ளிட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தைகள் விற்பனை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த அழகுகலை நிபுணர் ரேகாவுக்கு (வயது 40) தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் ஈரோட்டை சேர்ந்த புரோக்கர் அருள்சாமி மூலம் கொல்லிமலையில் பிறந்த 2 குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து இருப்பதும் தெரியவந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேகாவை நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

கைது எண்ணிக்கை 10 ஆக உயர்வு

பின்னர் அவரை நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு வருகிற 31-ந் தேதி வரை ரேகாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அவர் சேலம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். புரோக்கர் ரேகாவுடன் குழந்தைகள் விற்பனை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்