நடிகர் கமல்ஹாசன் வரலாற்று ஆசிரியர் ஆகிவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

நடிகர் கமல்ஹாசன் வரலாற்று ஆசிரியர் ஆகிவிட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2019-05-18 22:45 GMT
அடையாறு,

சென்னை மெரினா அருகே குப்பத்தில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களிடம் அங்கீகாரம்

எந்த அரசியல்வாதியும் மக்களை நம்பி இருக்கவேண்டுமே தவிர மதத்தை நம்பி இருக்கக்கூடாது. மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் மாநிலம் வளர்ச்சி பெற நம்முடைய பங்கு என்ன? என்று சிந்தித்து செயல்படுபவர்களைத்தான் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும்.

இதுபோல் சிந்தித்து செயலாற்றியதால்தான் எங்கள் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கும், எங்கள் இயக்கத்துக்கும் மக்களிடம் தொடர்ந்து அங்கீகாரம் கிடைத்தது.

வரலாற்று ஆசிரியர் ஆகிவிட்டார்

தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதவி மேனியா, டி.டி.வி.தினகரனுக்கு பதவி மற்றும் பணம் மேனியா வந்துள்ளது. மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை கணக்கு வாத்தியாராக இருந்தார். தற்போது நடிகர் கமல்ஹாசன் வரலாற்று ஆசிரியர் ஆகிவிட்டார்.

மக்களுக்கு நிறைய செய்யவேண்டியது உள்ளது. அதுகுறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகளை சொல்வதை விட்டுவிட்டு மதத்தை வைத்து அரசியல் செய்வதைவிட மோசமான விஷயம் இருக்க முடியாது.

கோடையை சமாளிப்போம்

தமிழகத்தில் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடிந்த அளவு அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. மேட்டூரில் இருந்து தண்ணீரை வீராணம் கொண்டுவந்து, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு வருகிறோம். சென்னையை பொறுத்தவரை கோடையை நிச்சயம் சமாளிப்போம்.

தமிழகம் மின் மிகை மாநிலமாகத்தான் உள்ளது. மின் வெட்டு என்பது வேறு. மின் தடை என்பது வேறு. தற்போது மின் தடங்கல்தான் ஏற்படுகிறதே தவிர மின் வெட்டு அல்ல. தமிழகத்தில் மின் வெட்டு என்பதே கிடையாது.

மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம் செய்வது ஒரு நம்பிக்கை. இதில் சாதி, மதம், இனம் கிடையாது. அனைத்து மதத்தினரும் மழைவேண்டி இறைவனை வேண்டலாம். மழை வர அதிகமாக மரங்களை நடவேண்டும். ஆளுக்கு ஒரு மரம் வைத்தால் தமிழகம் சோலைவனமாக மாறுவதுடன், தேவையான அளவு மழையும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்