‘சரித்திரம் பேசுகிறேன் என்று தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார்’ கமல்ஹாசன் மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு
‘சரித்திரம் பேசுகிறேன் என்று தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார்’ என கமல்ஹாசனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கி பேசினார்.
தூத்துக்குடி,
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சரித்திர உண்மையை சொல்கிறேன் என்று கூறி, தரித்திரத்தை விலைக்கு வாங்கி வருகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்று சொல்வது சரித்திர உண்மையா?.
அதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் பல உள்ளன. அதற்குள் யாரும் போக வேண்டாம். அது கசப்பான சம்பவங்கள். மன்னிக்கப்பட வேண்டிய சம்பவங்கள். அதனை பற்றி பேசிக் கொண்டு இருந்தால் மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும்.
அவர் முஸ்லிம் ஓட்டுக்களை வாங்குவதற்காக இது போன்று பேசுகிறார் என்று நினைக்கிறேன். இதே கருத்தை வலுவாக சொன்னால் முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும் என்று நினைக்கிறார்.
மன்னிக்க மாட்டார்கள்
அவரது விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை எப்படி சித்தரித்து காண்பித்தார் என்பது உலகத்துக்கே தெரியும். அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முஸ்லிம் மக்களின் கோரிக்கைகளை எல்லாம் ஏற்று, படத்தில் பல்வேறு காட்சிகளை அகற்றி திரையிட அனுமதி அளித்தார். அந்த படம் வெளியிடவில்லை என்றால் தமிழ்நாட்டை விட்டு வெளிநாடு சென்று விடுவேன் என்று கமல்ஹாசன் கூறினார்.
அப்போது படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்த அவர் தற்போது ஓட்டுக்காக இந்துக்களை பலிகடா ஆக்குவதற்காக, இந்துக்களை தீவிரவாதியாக காண்பித்து பேசுகிறார். இதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இஸ்லாமியர்களோ, இந்துக்களோ ஏற்கமாட்டார்கள்.
ஸ்டாலின் மீது தாக்கு
இந்துக்களை புண்படுத்தி பேசி மு.க.ஸ்டாலின், வீரமணி பழகி விட்டனர். அதுபோன்று நாமும் பேசினால் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கும் என்ற ஆசையில் இது போன்று பேசுகிறார். இது இந்துக்களை புண்படுத்தும் செயல். இது வரலாற்று உண்மை, மறைக்க முடியாது. உண்மை கசக்கத்தான் செய்யும் என்று கமல்ஹாசன் பேசுவது, அவர் மீண்டும் விஷத்தை கக்குகிறார் என்றுதான் பொருள்.
ராஜதந்திரி என்று பெயர் பெற்ற கருணாநிதியாலேயே அ.தி.மு.க.வை அழிக்க முடியவில்லை. அ.தி.மு.க.வும், ஆட்சியும் வலுவாக உள்ளது.
கமல்ஹாசன் கத்துக்குட்டி. அவர் கவுன்சிலர் தேர்தலில்கூட ஜெயிக்க முடியாது. இதுபோன்று எடக்கு முடக்காக பேசுகிறவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இளைஞர்கள் விழிப்போடு, தெளிவாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.