நான் பேசியது சரித்திர உண்மை; 2 நாட்களுக்கு பின் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேச்சு

யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை என்றும் உண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை என்றும் 2 நாட்களுக்கு பின் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசினார்.

Update: 2019-05-15 12:22 GMT
மதுரை,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்று கிழமை தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், “அந்த காலத்தில் வெள்ளையனே வெளியேறு என போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு என போராட வேண்டிய சூழல் வந்துவிட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க நான் வந்திருக்கிறேன் என நினைத்துக்கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக மூவர்ணக்கொடியில் அந்த மூன்று வண்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன்” என்று கூறினார்.

அவரது இந்த  பேச்சு, மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் இது போல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.  இதற்கு எதிராக அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார்.

கடந்த இரு நாட்களாக, கோட்சே சர்ச்சையை தொடர்ந்து தனது தேர்தல் பிரசாரத்தினை நிறுத்தி வைத்திருந்த கமல், மதுரையின் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர் பேசும்பொழுது, கூடி வாழ்ந்தால் தான் நன்மை என ஒவ்வொரு படங்களிலும் கூறி வருகிறேன்.  எனது பேச்சை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை.  உண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை.

தீவிரவாதத்திற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.  தீவிர அரசியலில் இறங்கியதால், தீவிரமாக தான் நான் பேசுவேன் என அவர் கூறினார்.

மேலும் செய்திகள்