ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மக்கள் போராட்டம் எரிமலையாக வெடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மக்கள் போராட்டம் எரிமலையாக வெடிக்கும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.;
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினால் தமிழகத்தின் வேளாண்மை இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் லட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த, வேதாந்தா குழுமத்திற்கு எடப்பாடி பழனிசாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது?.
தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது. காவிரி மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள். எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதியில் வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க முதல் கட்ட பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் கருத்து கேட்க வேண்டும். சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த வேண்டும். 274 ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கக்கூடாது. முதல்-அமைச்சரை சந்தித்து நிச்சயமாக அழுத்தம் கொடுத்து, டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டவடிவம் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். தேவைப்பட்டால் போராடுவோம்.
காவிரி டெல்டா பகுதி நமக்கு உணவு அளிக்கும் மண். அந்த மண்ணை பாதுகாக்க வேண்டும். நம் வருங்கால சந்ததியினருக்கு அதனை விட்டு செல்ல வேண்டும். இங்கு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என்று எந்த எரிவாயு திட்டமும் வரக்கூடாது. அது விவசாயத்துக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்தி, திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கி.வீரமணி
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் செயல்படுத்த மத்திய அரசு முனைந்துள்ளது. இதற்கு அந்த மாநில முதல்-மந்திரி மத்திய அரசிடம் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்று திட்டவட்டமாக புதுச்சேரி மாநில அரசின் நிலைப்பாட்டை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. புதுச்சேரி மாநில முதல்-மந்திரி மத்திய அரசுக்கு உறுதியான குரலில் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதை தமிழக முதல்-அமைச்சரும் பின்பற்றிட வேண்டாமா?.
தமிழ்நாட்டில் மூன்று இடங்கள் உள்பட 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் அத்துறை மந்திரி முன்னிலையில் கையொப்பமிட இருப்பதாகத் தகவல். வீண் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம். வேளாண் நிலங்களை, நீரை நாசப்படுத்தி கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். மீறி செயல்படுத்தினால், மக்கள் எரிமலையாகிச் சீறி எழுவார்கள்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் கடலிலும், நிலத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உரிமம் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதை உடனே ரத்து செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற சுயநலத்துக்காக தமிழக மக்களின் நலன்களை அடகு வைக்க தமிழக அரசு துணைபோவது கண்டனத்துக்குரியதாகும். இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மாட்டோம் என தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் உணர்வு நிலைக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவேட்டைக்கு ஆதரவாக செயல்படும் மோடியின் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்து வரும் சூழலில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க அனுமதியளித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத இச்செயல்பாட்டினை கண்டிப்பதுடன், காவிரிப்பாசனப் பகுதி மக்களை ஒருங்கிணைத்தும், ஒன்றுபடுத்தியும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்றவும், வேளாண் மண்டலத்தை பாதுகாக்கவும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.