வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார். #SatyabrataSahoo

Update: 2019-05-08 05:31 GMT
சென்னை,

தேனி தொகுதியில் பதிவான வாக்குகள் பொறியியல் கல்லூரி ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவையில் இருந்து லாரியில் பயன்படுத்தப்படாத மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர்  அலுவலகத்திற்கு வந்தது. இது, அங்கிருந்த பயன்படுத்தப்படாத இயந்திரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 

இதையறிந்த தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் எதிர்க்கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இறுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் சீல் உடைக்கப்பட்டு, கட்சியினரின் பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. இருந்தாலும் மாவட்ட ஆட்சியரின் விளக்கத்தை ஏற்க மறுத்த கட்சியினர், வாக்குப்பதிவு இயந்திரத்தை திரும்ப எடுத்துச்செல்ல வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை அடுத்து, கட்சியினர் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் 5 மணி நேரத்திற்கு மேலாக வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. 

வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை என தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கூறினார்.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  கூறும்போது, 

தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படியே, கோவையிலிருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது.  இது வழக்கமான நடவடிக்கையே. தேவை கருதியே தேனிக்கும், ஈரோட்டிற்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது. 

மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டால், பயன்படுத்துவதற்காக இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது. மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார். 

மேலும் செய்திகள்