தேர்வில் வெற்றி பெறாத ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
தேர்வில் வெற்றி பெறாத ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு;
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் உதயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களில் 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெறாத செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளனர். இதற்காக மருத்துவ பணிகள் தேர்வு விதிகளிலும் விலக்கு அளித்துள்ளனர். எனவே, இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, செவிலியர் பணியிடங்களை நிரப்ப புதிதாக தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், இந்த பணி நியமனத்தில் தேர்வு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெறாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள செவிலியர்களை எக்காரணம் கொண்டும் பணிவரன்முறை செய்யவோ அல்லது நிரந்தரம் செய்யவோ கூடாது. புதிதாக தேர்வு நடத்தும்போது அதில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கலாம். மருத்துவ பணிகள் தேர்வாணையம், தற்போது அமலில் உள்ள தேர்வு விதிகளை முறையாக பின்பற்றி அதன்படி தேர்வு நடத்தி நிரந்தர செவிலியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். அதுவரை தற்போது பணியில் உள்ள ஒப்பந்த செவிலியர்களை, பணியில் வைத்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.