திமுக ஆட்சி அமைக்கும் என துரைமுருகன் கூறுவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை -ஜெயக்குமார்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என துரைமுருகன் கூறிவருவது இந்தாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என துரைமுருகன் கூறிவருவது இந்தாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை. கற்பனையில் யார்வேண்டுமானாலும் சஞ்சரிக்கலாம். திமுகவின் பி-டீமாக டிடிவி.தினகரன் செயல்படுகிறார். விளையாட்டு துறைக்கு அதிமுக அரசு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் தடகள வீராங்கனை கோமதிக்கு, அவர் விரும்புகிற அளவுக்கு உதவி செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமாரிடம், மூன்று தொகுதி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய முயற்சிப்பது அதிமுகவுக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அந்த மாதிரியான நிர்ப்பந்தம் எதுவும் தங்களுக்கு கிடையாது என்றும், திமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சிகளை பழி வாங்கியது போன்ற ஜனநாயகப் படுகொலையை வரலாறு மறந்திருக்காது என்றும் ஜெயக்குமார் கூறினார்.
தகுதி நீக்கத்திற்கு உரிய முகாந்திரம் இருக்கின்ற பட்சத்தில் முடிவெடுக்க வேண்டியது பேரவைத் தலைவர் தான் என்றும், அவரது அதிகாரத்திற்குள் யாரும் செல்ல முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.