மதுரையில் பெண் வட்டாட்சியர் நுழைந்தது ஸ்டிராங் ரூம் அல்ல, ஸ்டோர் ரூம்; தலைமை தேர்தல் அதிகாரி
மதுரையில் பெண் வட்டாட்சியர் நுழைந்தது ஸ்டிராங் ரூம் அல்ல, ஸ்டோர் ரூம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மக்களவை தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டது. இதற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அறை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மர்ம நபர் ஒருவர் நுழைந்து சில ஆவணங்களை நகல் எடுத்து சென்றதாக தகவல் பரவியதை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
அறைக்குள் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதன்பின் வாக்குப்பதிவு ஆவண அறையில் கலால் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்ததாக தெரிய வந்தது. அவரிடம், மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். அவர் 2 மணிநேரம் ஆவண அறையில் இருந்துள்ளார். ஆனால், வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறைக்குள் அவர் நுழையவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்குள் பெண் வட்டாட்சியர் நுழையவில்லை. தபால் வாக்குகளும் ஸ்டிராங் ரூமில் பாதுகாப்புடன் உள்ளன.
இந்த சம்பவம் பற்றி அளிக்கப்பட்டு உள்ள புகார் மீது விசாரணை நடந்து வருகிறது. விரிவான தகவல் கிடைத்தவுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.