ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில் ரூ.1 கோடி பறிமுதல்; 4 பேர் கைது அதிகாரிகளை தாக்க முயன்றதாக 150 பேருக்கு வலைவீச்சு
ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில் ரூ.1½ கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். 150 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில் ரூ.1½ கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். 150 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
வாக்காளர்களுக்கு பணம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் அ.ம.மு.க. ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய, பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளை தாக்கி அந்த பணத்தை கைப்பற்ற அ.ம.மு.க. தொண்டர்கள் முயன்றனர். அவர்களை துணை ராணுவப்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.
ரூ.1½ கோடி பறிமுதல்
பின்னர் வருமானவரித்துறையினர் அந்த அறையில் இருந்த பணத்தை விடிய, விடிய எண்ணினர். மொத்தம் 120 பண்டல்கள் இருந்தன. அதில் ரூ.500, ரூ.100, ரூ.50, ரூ.20 நோட்டுகள் இருந்தன.
அந்த அறையில் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 48 லட்சத்து 52 ஆயிரத்து 900-ஐ வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம், கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
போலீஸ்காரரை கொல்ல முயற்சி
இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரி நடராஜரத்தினம் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அ.ம.மு.க. அலுவலக அறைக்கு சென்று சோதனை நடத்தினோம். ஆனால் சோதனை நடத்த விடாமல் அறையை அவர்கள் பூட்டினர். அறையின் கண்ணாடி கதவு வழியாக பார்த்தபோது அங்கு கட்டுக்கட்டாக பண்டல்கள் இருந்தன. உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு போலீசாரும், பறக்கும் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம்.
அப்போது 150-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள், அதிகாரிகளை அடித்து கொன்றால் தான் பணத்தை எடுத்து செல்ல முடியும் என்று கூறி கொலை வெறியுடன் தாக்கினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் நாகராஜனின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றனர்.
பின்னர் இன்ஸ்பெக்டர் பாலகுருவை தள்ளிவிட்டனர். பின்னர் அவர்கள் அறையின் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே சென்று பணத்தை எடுத்து செல்ல முயன்றனர். இதனால் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பணம் எடுத்து செல்வது தடுக்கப்பட்டது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4 பேர் கைது
அதன்பேரில் அ.ம.மு.க.வினர் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அதிகாரிகளுக்கு கொடுங்காயம் ஏற்படுத்துதல், அவதூறாக பேசி துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அ.ம.மு.க. மாவட்ட துணை செயலாளர் பழனி (வயது 54), ஆண்டிப்பட்டியை சேர்ந்த சுமன்ராஜ் (21), பிரகாஷ்ராஜ் (22), சிலோன் காலனியை சேர்ந்த மது (33) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆண்டிப்பட்டி நகர அ.ம.மு.க. செயலாளர் பொன்முருகன் (47), மாவட்ட மாணவர் அணி செயலாளர் செல்வம் உள்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.