வேலூர் தொகுதி தேர்தல் ரத்து; ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் ஜெயக்குமார்

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2019-04-16 15:43 GMT
வேலூரின் காட்பாடியில் கடந்த மாதம் 29 மற்றும் 30ந்தேதிகளில் வருமான வரித்துறை சோதனையின்போது தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் முக்கிய ஆவணங்களும், 10 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன்பின்னர் ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தி துரைமுருகனின் நெருங்கிய நண்பரும், தி.மு.க. பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீட்டிலிருந்து ரூ.11 கோடியே 48 லட்சம் பணத்தினை பறிமுதல் செய்தனர்.  வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக இந்த பணம் வைக்கப்பட்டு உள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதுபற்றிய புகாரை தொடர்ந்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய தீர்மானித்து தேர்தல் ஆணையம் குடியரசு தலைவருக்கு நேற்று பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தது.  இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதனை அடுத்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

எனினும், வேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை என்றும் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி ஆகும்.  பணப்பட்டுவாடா புகாரில் தொடர்புடைய வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்