தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 91 நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்த 11ந்தேதி தேர்தல் நடந்தது. அதை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 18ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் போட்டி களத்தில் பிரகாசிக்கின்றன.
கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் விதியின்படி, வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். 18ந்தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. எனவே 48 மணி நேரத்துக்கு முன்பு அதாவது, இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஓய்கிறது.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல்கள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 18ந்தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை (மதுரை நாடாளுமன்ற தொகுதி நீங்கலாக) நடைபெறும்.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்க செயல்பாடு அல்லது ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பிரசாரம் செய்யக்கூடாது. வெளிநபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.
இந்த விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126 (2)ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.