வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தகுந்த பாதுகாப்பு தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தகவல்
“வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது” என்று தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா கூறினார்.
மதுரை,
மதுரை சித்திரை திருவிழா மற்றும் தென் மண்டலத்திற்குட்பட்ட நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமையில் மதுரையில் நேற்று நடந்தது. தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், நெல்லை போலீஸ் கமிஷனர் பாஸ்கர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா பேசியதாவது:-
தேர்தலின் போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் காவல்துறையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சிறப்பு காவல்படையினர் தேர்தல் விதிகளின்படி பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் தேவையான அளவு அதிவிரைவுப்படையும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
மதுரை சித்திரை திருவிழா கொண்டாடப்படும் இடங்களில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் 300 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும். வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 83 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்திய 3,917 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள் சுமுகமாகவும், நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடைபெற தென்மண்டலத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.