சிறுபான்மை மக்களின் நண்பன் நரேந்திரமோடி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

பிரதமர் நரேந்திரமோடி சிறுபான்மை மக்களின் நண்பனாக இருப்பதாக, ஆண்டிப்பட்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.;

Update: 2019-04-13 23:15 GMT
தேனி, 

கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தேனி மாவட்டத்துக்கு முதல் முறையாக வந்துள்ள இந்திய தேசத்தின் இணையில்லா பிரதமரும், நாட்டை மீண்டும் ஆட்சி செய்ய இருக்கும் தேசத்தின் காவலருமான நரேந்திரமோடியை தமிழக மக்களின் சார்பில் வரவேற்கிறேன். இந்த நாடாளுமன்ற தேர்தல் நன்மைக்கும், தீமைக்கும் நடைபெற இருக்கும் மகாபாரத போராக இருக்கிறது. தேர்தல் களம் ஜனநாயக குருஷேத்திரமாக மாறி இருக்கிறது.

அன்று தர்மத்தின் பக்கம் கண்ணன் நின்றான். இன்று தர்மமே கண்ணனாக நிற்கிறது. எனவே, தர்மத்தின் கூட்டணியாக திகழும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றிமேல் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். இந்திய விடுதலைக்கு பிறகு, உலக நாடுகளால் உயர்த்தி பேசப்பட்டவர், பிரதமர் நரேந்திரமோடி. அதேநேரம் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற பிரதமரும் அவரே.

மதக்கலவரம் இல்லை

நரேந்திரமோடியின் ஆட்சிக்காலத்தில், இந்தியாவில் மதக்கலவரம் என்ற பேச்சுக்கே எங்கும் இடமில்லை என்ற நிலை உருவானது. சிறுபான்மை மக்களின் உண்மை நண்பனாக திகழ்பவர் நரேந்திரமோடி. ஒட்டுமொத்தமாக இந்தியாவின் மீது உலக அளவில் கம்பீரமான பார்வையை மோடியின் ஆட்சி உருவாக்கி இருக்கிறது.

அதனால், இந்த கம்பீரமான பிரதமரே மீண்டும் தொடர வேண்டும் என்று இந்தியா முடிவு எடுத்துள்ளது. அதை தான், தமிழ்நாடும் வருகிற 18-ந்தேதி முன்மொழிய இருக்கிறது. மத்திய அரசும், தமிழக அரசும் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அரசுகள் என்பதை மக்கள் அறிவார்கள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டம்-ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளித்தார்.

ரூ.60 ஆயிரம் கோடி திட்டம்

அதேபோல் பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் வளர்ச்சி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். ஆபரேஷன் சக்தி மூலம் விண்வெளியில் தாக்குதல் நடத்தும் சக்தியை நாடு பெற்றுள்ளது. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது தமிழர்களின் ஜீவாதார பிரச்சினையான காவிரி, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைகளில் தமிழக விவசாயிகளுக்கு சாதகமாக ஒரு துரும்பை கூட தி.மு.க. கிள்ளி போடவில்லை.

அதற்கு மாறாக தமிழகத்துக்கு துரோகத்தை தான் செய்தார்கள். தாங்கள் அங்கம் வகித்த மத்திய அரசை, தட்டி கேட்கும் தெம்பு தி.மு.க.விடம் இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு பல நன்மைகளை செய்து வருகிறது. தமிழகத்தின் தண்ணீர் தேவையை ஈடுசெய்வதற்கு, கோதாவரி ஆற்று தண்ணீரை கிருஷ்ணாநதி நீரோடு இணைத்து அதை காவிரியுடன் இணைக்க ரூ.60 ஆயிரம் கோடியில் திட்டம் ஒன்றை மோடி அரசு செய்ய இருக்கிறது.

எனவே, தமிழகத்துக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. நமது கூட்டணி, தி.மு.க.-காங்கிரசின் கூடா நட்பு கூட்டணியை வேரோடு வீழ்த்தும். அதை நிறைவேற்றிட தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக துணை நிற்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்