ஏழைத்தாயின் மகனாக இருந்தால் மோடி, விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் இருந்திருப்பாரா? மு.க.ஸ்டாலின் கேள்வி

ஏழைத்தாயின் மகனாக மோடி இருந்தால் விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்திருப்பாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.;

Update: 2019-04-12 23:30 GMT
சேலம், 

சேலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவின் இளம் தலைவர் ராகுல்காந்தி என்று அழைப்பதை விட இந்தியாவின் பிரதமராக வரவிருக்கும் ராகுல்காந்தி என்று அழைப்பதுதான் இப்பொழுது பொருத்தமாக இருக்கும். முதன்முதலில் தி.மு.க. சார்பில் ராகுல் தான் பிரதமர் என்று அறிவித்தவன் நான்.

40 இடங்களிலும் வெற்றி

இங்கே அமர்ந்திருக்கக் கூடிய ராகுல்காந்திக்கு, நான் ஒரு உறுதிமொழியை சொல்ல விரும்புகின்றேன். நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற அந்த உறுதிமொழியை தான் நான் எடுத்துக்கூற விரும்புகின்றேன். புதுச்சேரியையும் சேர்த்து தமிழகம் உள்ளிட்ட 40 இடங்களில் மிகப்பெரிய ஆதரவு நம்முடைய அணிக்கு வந்து கொண்டிருக்கின்றது. எனவே, நம்முடைய வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

எனவே, ராகுல்காந்தி அவர்களே நீங்கள் அண்மையில் உங்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றீர்கள். அதில், திராவிட இயக்கத்தின் எண்ணங்களை அப்படியே நீங்கள் பிரதிபலித்து இருக்கின்றீர்கள், அதற்காகத்தான் சொல்கின்றேன். நீங்கள், அருமையான உறுதிமொழிகளை தேர்தல் அறிக்கையில் தந்து இருக்கின்றீர்கள்.

தயாராக இருக்க வேண்டும்

இதைப் பார்த்து ரசிக்க, மகிழ்ச்சி அடைய, அண்ணா இல்லையே! கருணாநிதி இல்லையே என்ற அந்த கவலை என்னை ஆட்கொண்டது. அவர்கள் இருந்திருந்தால் ராகுல்காந்தியை உச்சி முகர்ந்து பாராட்டி வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்திருப்பார்கள்.

மோடி அவர்களே 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஏதாவது செய்ததுண்டா? அதையெல்லாம் சொல்ல முடியாமல் 2022, 2032, 2047 என போய் இருக்கின்றீர்கள். இப்போது மக்களின் விருப்பம் என்னவென்றால் நீங்கள் பதவியில் இருந்து இறங்கி வீட்டுக்கு போக வேண்டும். அதை நிறைவேற்றினால், 1000 கும்பிடு கும்பிடுவதற்கு தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்திய நாட்டில் உள்ள அனைவரும் காத்திருக்கின்றார்கள். எனவே, மக்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

ஏழைத்தாயின் மகன்

மோடி, நான் ஒரு ஏழைத்தாயின் மகன் என்று சொல்லுகின்றார். ஏழைத்தாயின் மகனாக இருந்தால் விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்திருப்பாரா? ஏழைகள், பரம ஏழைகளாக மாறிக் கொண்டு இருக்கின்றார்கள். ஏழைத்தாயின் மகனின் ஆட்சியில் விஜய் மல்லையா, லலித் மோடி, கார்ப்பரேட் கம்பெனிகள், அவர்கள் எல்லோரும் கோடி கோடியாக கொள்ளை அடித்துக்கொண்டு போகின்றனர். அதற்கு மோடியே சொல்கிறார் நான் ஒரு காவலாளி என்று. அவர் காவலாளி அல்ல களவாணி.

ராகுல்காந்தி மன்னர் குடும்பத்தை சார்ந்தவர் என்று ஒரு விமர்சனத்தை வைக்கிறார். மன்னர் குடும்பத்தைச் சார்ந்து இருக்கக் கூடியவர் என்பது உண்மைதான். அந்த மன்னர் குடும்பத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய ராகுல்காந்தி தான், ஏழைகளின் உள்ளம் அறிந்து மாதம் 6,000 ரூபாய் என ஒரு ஆண்டிற்கு 72,000 ரூபாய் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடியவர்களுக்கு வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற அந்த உணர்வோடு திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கின்றார்கள்.

நாட்டை விட்டு விரட்ட வேண்டாமா?

மன்னர் குடும்பத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய ராகுல்காந்தி தான் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, அதேபோல் கடன் கட்டமுடியாத விவசாயிகளுக்கு குற்ற வழக்கு கிடையாது. அவை அனைத்தும் ரத்து என அறிவித்து இருக்கிறார். நீங்கள் டீ ஆற்றினேன் என்று சொல்லுகின்றீர்கள். அது கேவலம் இல்லை, அருமையான தொழில் தான். ஆனால் டீ ஆற்றிக்கொண்டு இருந்த இப்போதைய பிரதமர் மோடி பணக்காரர்களை, கோடீஸ்வரர்களை, கொள்ளையடித்து வைத்திருப்பவர்களை பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருப்பார். இவை தவிர மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.

கருணாநிதியை அடக்கம் செய்ய நீதிமன்றம் மூலமாக அனுமதி பெற்று, அவரை அடக்கம் செய்து இருந்தாலும். அவருக்கு இடம் தர மறுத்த இந்த அயோக்கியர்கள் நாட்டில் இருக்கலாமா? நாட்டை விட்டு விரட்ட வேண்டாமா? அதற்குரிய நாள்தான் வருகின்ற 18-ந் தேதி என்பதை மறந்து விடாதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்