சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன்பு குழந்தையுடன் இளம்பெண் போராட்டம்
கொருக்குப்பேட்டையில் தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி தனது 2 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண், கணவர் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.;
பெரம்பூர்,
சென்னை, கொருக்குப்பேட்டை, எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 28). இவருக்கும், தண்டையார்பேட்டையை சேர்ந்த பவித்ரா (23) என்பவருக்கும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், இவர்களுக்கு திருமணம் ஆன சில மாதங்களில், ரமேஷ்குமாரின் தந்தை இறந்து விட்டார். மனைவி வந்த நேரம் சரியில்லை என்று பவித்ராவை, ரமேஷ்குமார் வீட்டில் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
கணவர் வீட்டின் முன்பு தர்ணா
இதற்கிடையில், பவித்ராவை, அவரின் தாய் வீட்டிற்கு ரமேஷ்குமார் அனுப்பி வைத்து, பின்னர் அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.
மேலும், பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்து, 2 மாதம் ஆகியும் ரமேஷ்குமார், பவித்ராவை, தனது வீட்டுக்கு அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பவித்ராவுடன் குடும்பம் நடத்த ரமேஷ்குமார் மறுத்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ரமேஷ்குமார் வீட்டு முன்பு பவித்ரா, தனது குழந்தையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக, தண்டையார்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.