சேலம் அருகே பறக்கும் படையினர் சோதனையில் 100 கிலோ தங்கம் பறிமுதல்

சேலம் அருகே இன்று காலை தேர்தல் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 100 கிலோ தங்கம் சிக்கியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2019-04-04 07:08 GMT
சேலம்:

சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து சேலத்தை நோக்கி வேன் வந்தது. இந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 100 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தங்கத்திற்கான உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என வேனில் இருந்தவர்களிடம் கேட்டனர். அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் உதவி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கத்தை ஆய்வு செய்து, வேனில் வந்தவர்களிடம் எங்கிருந்து தங்கத்தை எடுத்து வருகிறீர்கள்?, உரிய வரி செலுத்தப்பட்டு இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த 27-ந்தேதி காலை ஆத்தூர் பிரிவு ரோடு கூட்ரோட்டில் 7 கிலோ தங்க நகைகள், 28-ந்தேதி காலை கொண்டலாம்பட்டியில் 73 கிலோ தங்கம் வாகன சோதனையின் போது பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்