மனநல காப்பகத்துக்கு ரூ.25 ஆயிரம் முன்னாள் அமைச்சர் மகன் மீதான வழக்கு நிபந்தனையுடன் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

முன்னாள் அமைச்சர் மகன் மீதான வழக்கு நிபந்தனையுடன் ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-04-03 21:57 GMT
சென்னை,

சேலம் அங்கம்மாள் காலனியில் நகைக்கடை அதிபரான பிரேம்நாத் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும், தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகன் வீரபாண்டி ஏ.ராஜா, பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது வீரபாண்டி ஆறுமுகம் இறந்து விட்டார். இந்த நிலையில், இந்த வழக்கில் எஞ்சியவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஏ.ராஜா, பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், புகார்தாரர் மற்றும் அவரது சகோதரருடன் சமரசம் செய்துகொண்டோம். எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வீரபாண்டி ஏ.ராஜா, பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட 15 பேர் மீது சென்னை சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள நில மோசடி வழக்கை ரத்து செய்கிறேன். இவர்கள் சென்னை திரிசூலத்தில் உள்ள மனசு என்ற மனநல காப்பகத்துக்கு ரூ.25 ஆயிரத்தை நன்கொடையாக 2 வாரத்துக்குள் வழங்க வேண்டும். அந்த தொகையை செலுத்தியதற்கான ரசீதை நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் இந்த ரத்து உத்தரவு தானாகவே ரத்தாகிவிடும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்