உதயநிதி ஸ்டாலின் காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை
மேட்டுப்பாளையம் அருகே உதயநிதி ஸ்டாலின் சென்ற காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உதயநிதி ஸ்டாலின் சென்ற காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் சண்முக சுந்தரம், கோவை தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் கோவை வந்தார். பின்னர் அவர் வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். இரவில் மேட்டுப்பாளையத்தில் தங்கினார்.
இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்வதற்காக உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை 10.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அவருடன் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர். மற்றொரு காரில் திருச்சியை அடுத்த திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கூடலூர் எம்.எல்.ஏ. திராவிட மணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் அஸ்ரப் அலி ஆகியோர் சென்றனர்.
சோதனை
இந்த நிலையில் காலை 10.45 மணிக்கு மேட்டுப்பாளையம் கல்லாறு ரோட்டில் வனத்துறை சோதனைச்சாவடி அருகே கார்கள் சென்று கொண்டிருந்த போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் உதயநிதி ஸ்டாலின் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அவருடன் வந்த மற்ற 7 கார்களையும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவர்களுடன் வந்த கார்களிலும் பணம் மற்றும் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் வந்த கார் மற்றும் அவருடன் வந்த கார்கள் ஊட்டிக்கு சென்றன. பறக்கும் படையினரின் இந்த சோதனையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.