3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயார்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு, காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் 21-ல் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில், எதிர்க்கட்சிகள் முறையிட்டுள்ளன.
இதற்கிடையில், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் தேர்தல் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் முடிந்தன. இதற்கு மத்தியில், நேற்று முன் தினம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, சூலூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த நிலையில், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயார். ஓட்டப்பிடாரம் தொகுதி காலியாக உள்ளது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டோம். திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கின் உத்தரவு நகல் கிடைத்துவிட்டது, சூலூர் தொகுதி குறித்தும் விரைவில் அறிக்கை அனுப்புவோம்" என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் இதுவரை 209 கிலோ தங்கம், 310 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 94 கிலோ தங்கம் உரியவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.