மாணவ-மாணவிகளுக்கான வங்கி கடன் ரத்து செய்யப்படும் : அ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல ஒற்றுமை

அ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் அறிக்கைகள் நேற்று ஒரே நாளில் வெளியிடப்பட்டது. வங்கி கடன் ரத்து, நதிகள் இணைப்பு, நீட் தேர்வு ரத்து போன்ற அம்சங்கள் இரு தேர்தல் அறிக்கைகளிலும் இடம் பெற்று இருந்தது.;

Update: 2019-03-20 00:17 GMT
சென்னை, 

தமிழக அரசியலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எதிர், எதிர் துருவங்களாக இருந்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இரு கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகளை நடத்தி முடித்து இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் அ.தி.மு.க. தரப்பிலும், தி.மு.க. தரப்பிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுவரையில் நடந்த தேர்தல் காலங்களில் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர் பட்டியல் ஒரே நாளில் வெளியானது இல்லை.

தற்போது மேலும் ஒரு ஒற்றுமையாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும், தி.மு.க. தேர்தல் அறிக்கையும் நேற்று வெளியிடப்பட்டது.

இரு கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் பல ஒற்றுமைகள் காணப்பட்டன. மத்திய அரசை வலியுறுத்தும் பல கோரிக்கைகள் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு, மக்களுக்கு உறுதிமொழியாக தரப்பட்டுள்ளது.

மேலும் மாணவ- மாணவிகளின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும், வருமான வரி உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், மத்திய அலுவல் மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டும், புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட மத்திய அரசை வலியுறுத்தும் கோரிக்கைகளும் அ.தி.மு.க.- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

விவசாயிகளுக்கான கடன்கனை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி இருந்தது. கடன்களால் அல்லல்படும் விவசாயிகளுக்கு கடன் சுமையை நீக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்