ஆண்டிப்பட்டி தொகுதியில் அண்ணன்-தம்பி மோதல் அ.தி.மு.க - தி.மு.க. சார்பில் களம் இறங்குகிறார்கள்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எதிரும், புதிருமாக அண்ணன்-தம்பி போட்டியிடுகின்றனர்.;
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் மகாராஜன் போட்டியிடுகிறார். 64 வயதான இவர், அந்த கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ஆவார். ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் வசிக்கும் இவர், விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதைத்தவிர ஒப்பந்ததாரராகவும் உள்ளார். முத்தனம்பட்டி கிளை செயலாளராகவும், ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இதேபோல் அந்த தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் லோகிராஜன் களம் இறங்கியுள்ளார். 58 வயதான இவர், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கில் வசித்து வருகிறார். இவரும் ஒப்பந்ததாரர். முத்தனம்பட்டி கிளை செயலாளராக பதவி வகித்துள்ளார். மேலும் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக பதவி வகித்து இருக்கிறார்.
அ.தி.மு.க-தி.மு.க. சார்பில் போட்டியிடும் லோகிராஜனும், மகாராஜனும் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவர். அண்ணன்-தம்பியாக இருந்தாலும் அரசியல் ரீதியாக எதிர், எதிராக தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். சர்வ பலம் பொருந்திய இவர்கள் களம் இறங்கி இருப்பதால் அங்கு கடும் போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு அருள்ராஜன், குபேந்திரன் ஆகிய 2 சகோதரர்களும் உள்ளனர். இவர்களும் ஒப்பந்ததாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்திருக்கும் 25 ஏக்கர் நிலம் லோகிராஜனின் குடும்ப சொத்து ஆகும். மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றபோது, அந்த நிலத்தை அரசுக்கு லோகிராஜன் தானமாக வழங்கினார்.