பனங்காட்டு மக்கள் கழகம் புதிய கட்சி தொடக்கம்
பனங்காட்டு மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடக்க விழா சேலத்தில் நடைபெற்றது.;
சேலம்,
நாடார் சங்கங்கள் சார்பில் பனங்காட்டு மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடக்க விழா சேலத்தில் நடைபெற்றது. இதற்கு சுபாஷ்பண்ணையார் தலைமை தாங்கினார். சேலம் வாழ்நாடார் சங்க தலைவர் காசிமணி, சேலம் நாடார் சங்க நிர்வாகி ராஜா, சான்றோர் குல நாடார் அறக்கட்டளை கவுரவ தலைவர் துரைசாமி, நாடார் மகாஜன சங்க துணை தலைவர் எடிசன் ஜெபதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோகனவேல் வரவேற்று பேசினார்
பனங்காட்டு மக்கள் கழகத்தின் தலைவர் சுபாஷ்பண்ணையார் மற்றும் ராக்கெட் ராஜா, ஹரி நாடார் ஆகியோர் கட்சி கொடி, பெயர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார்கள்.
அரசுக்கு நன்றி
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் ஆகியோர் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பது, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு நன்றி தெரிவிப்பது, பனை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் பிற சமுதாயங்களை சேர்ந்தவர்கள் மீது சுமத்தப்படும் பொய் புகார்களை தீர விசாரிக்காமல், வழக்கு தொடுப்பதை வன்மையாக கண்டிப்பது, அதன் மூலம் நடக்கும் சாதி மோதல்களை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் குறிக்கோள்
முன்னதாக சுபாஷ் பண்ணையார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடார் சமுதாய நலனுக்காகத்தான் கட்சி தொடங்கப்பட்டு உள்ளது. பச்சை, நீல நிறத்தில் அதில் பனை மரம் வைத்து கட்சி கொடி அறிமுகப்படுத்தி உள்ளோம். வன்கொடுமை சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பொய்யான பிரசாரம் செய்கிறார்கள். இதனால் நாடார் சமுதாய மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதற்கு எதிராக தேர்தலில் பிரசாரம் செய்வோம். சமுதாய பிரச்சினைகளை தீர்ப்பது முதல் குறிக்கோள். பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஈரோடு நாடார் சங்க தலைவர் மாரியப்பன், கொங்கு மண்டல சான்றோர் நாடார் சங்க தலைவர் உதயாவெங்கடேஷ், செயலாளர் தேவராஜ், நாடார் மகாஜன சங்க செயற்குழு உறுப்பினர் முருகேசன், சான்றோர் குல நாடார் அறக்கட்டளை செயலாளர் சுவாமிநாதன், சேலம் நாடார் சங்க நிர்வாகி ராஜா, சென்னை நாடார் நலச்சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.