மதுரை சித்திரைத் திருவிழாவால் வாக்குப்பதிவு பாதிக்குமா? கலெக்டரிடம் விளக்கம் கேட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

மதுரை சித்திரைத் திருவிழாவால் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றி அந்த மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

Update: 2019-03-12 00:00 GMT
சென்னை,

தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

மதுரை சித்திரைத் திருவிழாவால் வாக்குப்பதிவில் இடையூறு ஏற்படும் என்ற தகவல்கள் வந்தன. இதுகுறித்து மதுரை கலெக்டரிடம் விசாரித்தேன். இந்த விழா 10 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் என்றும், அதிகம் பேர் கூடும் நாளான ஏப்ரல் 19-ந் தேதியன்று அங்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

முந்தைய நாளான ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடப்பதால் விழாவினால் அதற்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார். ஆனாலும் அவரிடம் விரிவான விளக்கத்தை உடனடியாக தரவேண்டும் என்று கேட்டுள்ளேன்.

ஆலோசனை

மதுவிலக்கு அமலாக்க அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலகட்டங்களில் மதுபான கொள்முதல் அளவு, விற்பனை அளவு ஆகியவற்றை தினமும் கண்காணித்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளேன்.

மேலும், கள்ளச்சாராய விற்பனை, கடத்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தக் கோரியுள்ளேன். அதுபோல வருமான வரித்துறையினரையும் அழைத்து பேசவுள்ளேன்.

அமைச்சர் வாகனம்

சமுக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசாரங்களை கண்காணிப்பது சற்று கடினமான காரியம். சமுக வலைத்தளங்களில் வேட்பாளர் தனக்காக செய்யும் பிரசாரம் மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடுபவர்களுக்கு எதிராக செய்யும் பிரசாரங்களுக்கு செலவுகளைச் செய்திருந்தால், அதை தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வலியுறுத்துவோம்.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அமைச்சர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்களை அரசு அலுவலகத்துக்கு வரவும், வீட்டுக்கு செல்லவும் பயன்படுத்த முடியும். அதில் சைரன் போன்ற வேறு அடையாளங்கள் இருந்தால் கழற்றிவிட வேண்டும்.

பறக்கும் படை

வாகன சோதனை, தேர்தல் கண்காணிப்புக்காக மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும்படை ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப அவற்றின் எண்ணிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) உயர்த்திக் கொள்வார்கள்.

கண்காணிப்புக் குழுவில் ஒரு தாசில்தார், 3 அல்லது 4 போலீசார் இடம் பெறுவார்கள். பதற்றத்துக்குரிய பகுதிகள் என்றால், இவர்களுடன் துணை ராணுவ வீரர் ஒருவர் இடம் பெறுவார். சோதனைச் சாவடி உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் இவர்கள் பணியாற்றுவார்கள்.

பணம் பறிமுதல்

பறக்கும் படையில் துணை தாசில்தார் அல்லது துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ஒருவர், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், உதவியாளர், ஒரு வீடியோ படப்பிடிப்பாளர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் தேர்தல் விதிமீறல் புகார்கள் வரும் இடங்களுக்குச் செல்வார்கள்.

மது, ஆயுதம் கடத்தல் போன்ற குற்றங்களை கண் காணிப்பார்கள். வேட்பாளர்களின் தேர்தல் செலவை கணக்கிடுவார்கள். பொதுக் கூட்டங்கள் ஆகிய இடங்களுக்குச் சென்று தகவல் சேகரிப்பார்கள். இதுபோன்ற படைகள் மூலம் திருவாரூரில் ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பதற்ற வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்காக 200 கம்பெனி துணை ராணுவத்தை கேட்டுள்ளோம். முதலில் 10 கம்பெனி துணை ராணுவம் இந்த வாரத்தில் வரவுள்ளது.

இதுவரை பதற்றத்துக்குரியவையாக 7,316 வாக்குச்சாவடிகள் போலீசாரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கையில் மாற்றங்கள் வரக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்