பழம்பெரும் நடிகைகள் 9 பேருக்கு சாதனையாளர் விருது கவர்னர் வழங்கினார்
தினமணி பத்திரிகை சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் பழம்பெரும் நடிகைகள் 9 பேருக்கு சாதனையாளர் விருதை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.;
சென்னை,
தினமணி பத்திரிகை சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் பழம்பெரும் நடிகைகள் 9 பேருக்கு சாதனையாளர் விருதை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
சாதனையாளர் விருது
உலக மகளிர் தினத்தையொட்டி தினமணி பத்திரிகை சார்பில் பழம்பெரும் நடிகைகள் 9 பேருக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி மேனன் வரவேற்றார்.
விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, 1950-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடிப்பாற்றலால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகள் வைஜயந்திமாலா, சவுகார் ஜானகி, ஜமுனா, சாரதா, காஞ்சனா, ராஜஸ்ரீ, கே.ஆர்.விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து தங்க காசு, விருது வழங்கி பாராட்டினார்.
தமிழ் சினிமா
விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-
சென்னைக்கும், சினிமாவுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. திறமைவாய்ந்த ஏராளமான நடிகர், நடிகைகளை தமிழ் சினிமா உருவாக்கி உள்ளது. மாடர்ன் தியேட்டர், ஜெமினி ஸ்டூடியோ, ஏ.வி.எம். ஸ்டூடியோ போன்ற மிகப்பெரிய ஸ்டூடியோக்கள் மூலம் ஏராளமான தமிழ் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. தமிழக சினிமாவில் காலடி எடுத்து வைத்த பலர் தென்னிந்தியாவில் பல மொழி படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளனர்.
வைஜயந்திமாலா, ஜமுனா, சாரதா போன்றவர்கள் அரசியலில் தங்களை அர்ப்பணித்து கொண்டவர்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. இவர்கள் எம்.பி.யாக இருந்த போது நானும் எம்.பி.யாக இருந்துள்ளேன். அவர்களுடன் நாடாளுமன்றத்தில் உரையாடியதை நினைத்து பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நல்ல கருத்துகள்
சாதனையாளர் விருது பெறும் இவர்கள் தாங்கள் நடித்த படங்கள் மூலம் சமுதாயத்துக்கு பல்வேறு நல்ல கருத்துகளை தந்துள்ளனர். சுதந்திரத்துக்கு முன்பு பெண்கள் நான்கு சுவற்றுக்குள் அடைபட்டிருந்த நிலை இருந்தது. 1950-க்கு பின்பு பெண்கள் முன்னேற்றம் படிப்படியாக உயர்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் முதுநிலை துணை தலைவர் விக்னேஷ்குமார் நன்றி கூறினார்.