கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழு தி.மு.க.வுடன் இன்று பேச்சுவார்த்தை

கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தி.மு.க.வுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.;

Update: 2019-03-08 20:00 GMT
சென்னை, 

கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தி.மு.க.வுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

தொகுதி பங்கீடு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை(இன்று) பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் உடனடியாக தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டது.

அழகிரி தலைமையில் குழு

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோரை கொண்ட தொகுதி பங்கீட்டிற்கான குழுவினர் இன்று காலை 11 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உத்தேச பட்டியல்

காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஆரணி, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்