காவல் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை தெரிந்து கொள்ள புதிய செயலி போலீஸ் டி.ஜி.பி. அறிமுகம் செய்து வைத்தார்

காவலர் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை தெரிந்து கொள்ளும் புதிய செயலியை, தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அறிமுகம் செய்துவைத்தார்.;

Update: 2019-03-06 21:15 GMT
சென்னை, 

காவலர் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை தெரிந்து கொள்ளும் புதிய செயலியை, தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அறிமுகம் செய்துவைத்தார்.

காவல் அங்காடிகள்

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு ரூ.7.80 கோடி செலவில், அனைத்து மாவட்ட தலைமையிடங்கள், 15 சிறப்பு காவல் படை அணிகள் மற்றும் தமிழ்நாடு காவல் பயிற்சியகம், சென்னை என தமிழகம் முழுவதும் மொத்தம் 50 இடங்களில் தமிழ்நாடு காவல் அங்காடிகள் செயல்பாட்டில் உள்ளன.

தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அந்த துறைகளில் ஓய்வுபெற்ற அலுவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள், வனத்துறையில் பணிபுரியும் சீருடை அலுவலர்கள், ஓய்வுபெற்ற சீருடை அலுவலர்கள் என மொத்தம் சுமார் 1.5 லட்சம் பயனாளிகள் தமிழ்நாடு காவல் அங்காடி யில் பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

வீட்டு உபயோகப் பொருட்கள்

தமிழ்நாடு காவல் அங்காடியில், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனம், மின்னணு பொருட்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரையில் தமிழ்நாடு காவல் அங்காடியின் பயனாளிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட் களை வாங்க, காவல் அங்காடிகளுக்கு நேரடியாக சென்று அங்கு விற்கப்படும் பொருட்களின் விலை மற்றும் இருப்பு விவரத்தை அறிந்து அதன் பிறகு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

புதிய செயலி

முதல்கட்டமாக, பயனாளிகள் அனைவரும் தமிழ்நாடு காவல் அங்காடிகளில் விற்கப்படும் அனைத்து பொருட்களின் விலை மற்றும் இருப்பு விவரங்களை தங்கள் அலைபேசியின் வாயிலாக அறிந்து பயன்பெறும்வகையில் ‘காவலர் அங்காடி’ என்ற புதிய செயலியை போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அறிமுகம் செய்துவைத்தார்.

இந்த செயலியின், செயல்பாட்டினை மேலும் விரிவுபடுத்தி பயனாளிகளுக்கு மேலும் சிறப்பான சேவை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த காவலர் அங்காடி www.tnpolicecanteen.com என்ற இணையதளத்தின் மூலமாகவும், கூகுள் பிளே ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்யலாம். ஆப் ஸ்டோர் மூலம் அடுத்த வாரம் முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்