தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.;
சென்னை,
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இதில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
இதேபோன்று தொகுதி பங்கீடு பற்றி தி.மு.க.வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நேற்று 2-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. கூறிய தொகுதி எண்ணிக்கை பற்றி நாளை (இன்று) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூறி இருந்தது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கையெழுத்திட்டனர்.
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறும் போது,
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பாஜக- அதிமுக- பாமக கூட்டணியை தோற்கடிப்பதே எங்கள் இலக்கு. நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் வந்தாலும் திமுகவுக்கு ஆதரவு என கூறினார்.