ஏ.டி.எம். எந்திரத்தில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி

திருச்சியில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தன. இதனால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.;

Update: 2019-03-02 22:45 GMT
திருச்சி,

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணத்தை டெபாசிட் செய்வதற்காக ஏ.டி.எம். மையங்களில் டெபாசிட் எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருவானைக்காவலில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாம்பழச்சாலையை சேர்ந்தவர் விஜயகுரு. இவர் திருவானைக்காவலில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் மற்ற அதிகாரிகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம். எந்திரத்தில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த தொகையை எடுக்க சென்றார். அப்போது அதில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்த 500 ரூபாய் நோட்டுகளில் 13 நோட்டுகள் (ரூ.6,500) கள்ள நோட்டுகளாக இருந்தது.

இதனால் அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து வங்கி மேலாளர் விஜயகுரு, மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனனிடம் புகார் அளித்தார். இதையடுத்து துணை கமிஷனர் உத்தரவின்பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் சம்பவத்தன்று பணத்தை டெபாசிட் செய்த நபர் யார்? என அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளநோட்டுக்களை தயாரித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது ஏ.டி.எம். எந்திரத்தில் கள்ளநோட்டுகள் சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்