மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை பதிவுத் துறையில் செயல்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு போராடி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசுத்துறைகளில் இரண்டாம் நிலை சார்பதிவாளர் உள்ளிட்ட சில பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமிக்கப்படும்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு போராடி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் இத்தீர்ப்பு பதிவுத்துறையில் இன்னும் செயல்படுத்தப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பால் இழைக்கப்பட்ட அநீதியை, தமிழக அரசு தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து துடைத்தது. அதன் பயன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைப்பதை உறுதி செய்யாவிட்டால், சுப்ரீம் கோர்ட்டில் போராடிப்பெற்ற தீர்ப்பு பயனற்றதாகிவிடும்.
எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பதிவுத்துறையில் கடந்த காலங்களில் செய்யப்பட்ட பணியாளர் நியமனங்களுக்கு முன்தேதியிட்டு இடஒதுக்கீடு வழங்கி, அதனடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் மட்டுமே மாவட்ட பதிவாளர் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள சார்பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
மேலும், பதிவுத்துறை தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் சமூகநீதியில் அக்கறை கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை அந்த பதவியில் அரசு நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.