கீழடியில் 5-வது கட்ட அகழாய்வு இன்னும் 2 மாதத்தில் தொடங்கும் அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

கீழடியில் 5-வது கட்ட அகழாய்வு இன்னும் 2 மாதத்தில் தொடங்கும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

Update: 2019-02-28 20:30 GMT
தஞ்சாவூர், 

தஞ்சையில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீழடியில் 5-வது கட்ட அகழாய்வு இன்னும் விரிவாக நல்ல உலகத்தரம் மிக்க பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த ஆய்வு 2 மாதங்களில் தொடங்க உள்ளது. முதல் 4 ஆய்வுகளில் கண்டெடுத்த 14 ஆயிரத்து 500 பொருட்களையும் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 1 ஏக்கரில் அகழ் வைப்பகம் ஏற்படுத்த அரசு ரூ.1 கோடி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசிடமும் ரூ.2 கோடி கேட்டுள்ளோம்.

தமிழகத்தில் உள்ள 36 அருங்காட்சியகத்தில் 1 லட்சத்து 22 ஆயிரம் அரும்பொருட்கள் உள்ளன. அதில் 10 சதவீதம் தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 4 அருங்காட்சியகத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேனி, திருவண்ணாமலையில் புதிய அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

அருங்காட்சியகங்களில் இருக்கிற பொருட்களை காட்சிப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். ஆண்டுக்கு ஒரு வரலாற்று சின்னங்களை மேம்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு தரங்கம்பாடி கோட்டை ரூ.4 கோடியில் உலகப்புகழ்பெற்ற இடமாக மாற்றப்பட்டு உள்ளது.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் 91 வரலாற்று சின்னங்கள் உள்ளன. இதில் இந்த ஆண்டு கன்னியாகுமரி கோட்டை உள்பட 12 கோட்டைகள் மேம்படுத்த ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்