ஜெயலலிதா சொத்து, கடன் விவரங்களை தாக்கல் செய்யுங்கள் வருமான வரித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

ஜெயலலிதாவுக்கு எவ்வளவு கடன்கள் உள்ளன?, எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி வருமான வரித்துறைக்கும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2019-01-02 21:30 GMT

சென்னை,

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எவ்வளவு கடன்கள் உள்ளன?, எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி வருமான வரித்துறைக்கும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்கள் சரியா?

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சுமார் ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், சென்னை கே.கே.நகரை சேர்ந்த புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2016–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களும், சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களும் சரியாக உள்ளதா? என்பதை தீபா, தீபக் ஆகியோர் சரிபார்க்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

தீர்ப்பாயத்தில் வழக்கு

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.எல்.சுதர்சனம், ‘இந்தியன் வங்கியில் ஜெயலலிதா ரூ.1.50 கோடி கடன் பெற்றுள்ளார். அந்த கடனை திருப்பிச் செலுத்தாததால், கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இந்தியன் வங்கியில் ஜெயலலிதா கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தவில்லை என்று தீபக் வக்கீல் கூறுகிறார். அதேநேரம், இந்த கடன் வாங்கிய விவரங்களை, 2016–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் ஜெயலலிதா குறிப்பிடவில்லை.

எவ்வளவு கடன்?

வருமான வரித்துறையினர் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் கீழ் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. ஒருவேளை இந்த வழக்கில் வருமான வரித்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், ஜெயலலிதாவின் சொத்துக்களின் மூலமே, வழக்கில் சம்பந்தப்பட்ட தொகையை செலுத்த வேண்டியது வரும்.

எனவே, ஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன?, எவ்வளவு கடன்கள் உள்ளன? என்பதை கணக்கிட வேண்டியதுள்ளது. இந்த விவரங்களை எல்லாம் தரக்கூடிய நிலையில் வருமான வரித்துறையும், அமலாக்கப்பிரிவும்தான் உள்ளன. அதனால், அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தையும், வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையரையும் எதிர் மனுதாரர்களாக தாமாக முன்வந்து சேர்க்கிறோம்.

நினைவு இல்லம்

இதற்கிடையில், ஜெயலலிதா வசித்த 10 கிரவுண்ட் கொண்ட போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக போயஸ் கார்டனில் வசிப்போரின் கருத்துக்களை கேட்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன.

எனவே, இந்த வழக்கில், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளரையும் எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். இவர்கள் அனைவரும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 7–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்