மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – கோயம்பேடு வரையிலான 2–வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.20,196 கோடி ஒப்புதல் கவர்னர் தகவல்
2–வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை ரூ.20,196 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளதாக கவர்னர் கூறினார்.;
சென்னை,
மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – கோயம்பேடு வரையிலான 2–வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை ரூ.20,196 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:–
ரூ.20,196 கோடி ஒப்புதல்சென்னை மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியில் சேவைகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், 2019–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் (அதாவது இம்மாத இறுதிக்குள்) முதற்கட்டத் திட்டத்தின் அனைத்து வழித்தடங்களிலும் சேவைகள் முழுமையாக இயக்கப்படும். சுமார் ரூ.3,770 கோடி செலவில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான முதற்கட்ட விரிவாக்க திட்டச் சேவைகள், 2020–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் திட்டமிட்டபடி தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
3 வழித்தடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தினை, 107.55 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்துவதற்கு மாநில அரசு ஏற்கனவே கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையானது ரூ.20,196 கோடி நிதியுதவியினை, 52 கிலோ மீட்டர் நீளத்திற்கான மாதவரம் – சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் – சென்னை புறநகர் பஸ் நிலையம் (கோயம்பேடு) வரையிலான முன்னுரிமை வழித்தடப் பகுதிகளுக்கு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பன்முகப் போக்குவரத்து அமைப்புஏறத்தாழ ரூ.4,770 கோடிக்கான முதல் தவணைக்கான கடன் ஒப்பந்தம் 2018–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21–ந் தேதி கையொப்பமிடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட பன்முகப் போக்குவரத்து அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியாக, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமச் சட்டம் மற்றும் அதற்கான சட்ட விதிகள், 2019–ம் ஆண்டு ஜனவரி மாதம் 16–ந் தேதி அன்று அறிவிக்கை செய்யப்படும் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.