வீட்டுவசதி வாரிய மனை ஒதுக்கீட்டுக்கான விற்பனை பத்திரம் பெறலாம் தமிழக அரசு அறிவிப்பு
சென்னை ஜெ.ஜெ.நகர், ஆவடி, திருமுல்லைவாயல் பகுதியில் வீட்டுவசதி வாரிய மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான விற்பனை பத்திரங்களை ஒதுக்கீடுதாரர்கள் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஜெ.ஜெ.நகர் கோட்டத்திற்கு உட்பட்ட முகப்பேர் கிழக்கு மற்றும் மேற்கு; முகப்பேர் ஏரி; முகப்பேர் ஏரி (நிலவங்கி); அம்பத்தூர் பகுதி 1 முதல் 3; நொளாம்பூர் திட்டப் பகுதி 1 மற்றும் 2;
ஆவடி மற்றும் திருமுல்லைவாயல் ஆகிய திட்டப்பகுதிகளில் ஒதுக்கீடு செய்த மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடுதாரர்கள் முழுத்தொகை செலுத்தி இருந்தால், ஒதுக்கீடுக்குறிய அசல் ஆவணங்கள், இந்த அறிவிப்பு வெளிவந்த 30 நாட்களுக்குள் வீட்டுவசதி வாரிய அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆவணங்களை சமர்ப்பித்து விற்பனை பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.
ஆவணங்களின் விவரம்
உறுதி அறிக்கை ரூ.20 பெறுமான முத்திரை தாளில் தட்டச்சு செய்து அரசு அங்கீகாரம் பெற்ற அலுவலரிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். புகைப்பட அடையாள சான்றிதழை, அரசு அங்கீகாரம் பெற்ற அலுவலரின் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆய்வு கட்டணத்தை இந்த அலுவலக காசாளர் பிரிவில் செலுத்தி அதற்கான ரசீதை சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலே கூறப்பட்ட குடியிருப்பிற்குரிய தொகையை செலுத்த வங்கியில் வீட்டுவசதி கடன் பெற்று இருந்தால் அவ்வங்கியிலிருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். அரசினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அசல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். (ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வருமான வரி ‘பான்’ அட்டை).
கணக்கை நேர் செய்யலாம்
நிலுவைத்தொகை ஏதேனும் செலுத்த வேண்டியதிருந்தால், அவர்கள் தங்களிடம் உள்ள ரசீதுகளை சமர்ப்பித்து கணக்கை நேர் செய்து கொள்ள வேண்டும். இந்த ஆவணங்களை சமர்ப்பித்து விற்பனை பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒதுக்கீடுதாரர்களின் பெயர் மற்றும் மனை எண்கள், அடுக்குமாடி குடியிருப்பு எண்கள் பற்றிய விவரங்களை www.tnhb.gov.in என்ற தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய இணையதளத்தில் காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.